19 September 2010

பன்றிக் காய்ச்சல் தடுப்பூசித் திட்டம்

பொது சுகாதாரத்துறை தொடர்பான முதலமைச்சரின் அறிக்கை

தமிழகத்தில் மட்டும்தான் பன்றிக்காய்ச்சலுக்கு குறைந்த விலையில் தடுப்பூசி போடும் திட்டம் தொடங் கப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களிடம் இந்தக் குறைந்த தொகையையும் கூட இனி வசூலிக்கத் தேவையில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள கடிதவடிவிலான அறிக்கை:

சில பேருக்கு நம்மைப் பற்றி - நமது அரசைப் பற்றி - யாரைப் பற்றியாவது, எதைப்பற்றியாவது குறை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களால் தூங்க முடியாது. மருத்துவர்கள் எதற்கு மருந்து கண்டு பிடிக்கிறார்களோ இல்லையோ இந்த நோய்க்கு ஒரு மருந்து கண்டுபிடிக்க முதலில் முன் வரவேண்டும். அரசு மருத்துவ மனைகளிலே அந்த மருந்து இல்லை, இந்த மருந்து இல்லை, மருத்துவர்கள் இல்லை, அந்தத் துறையே சரியில்லை, வெறும் வியாபாரமாகி விட்டது என்றெல்லாம் புலம்பித் தவித்து அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அந்த அறிக்கைக்காக குறிப்பாகப் பதில் கூறாவிட்டாலும், அதையும் ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு, மக்கள் நல்வாழ்வுக்காக எந்தத் துறைகளில் எந்த அளவிற்கு விரிவானப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதை இன்று முதல் விளக்கிட விரும்புகின்றேன்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் இந்தியாவிற்கே முன்மாதிரியாக விளங்குகிறது என்று, குறிப்பாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப் படும் “கலைஞர் மருத்துவ காப்பீட்டுத் திட்ட”த்தை நாட்டிலே உள்ள நல்லவர்கள் எல்லாம் பாராட்டி வருகின்ற நிலையில் அந்தத் திட்டத்தை தொடர்ந்து ஒரு சிலர் குறை கூறி வருகின்றனர்.

அத்தகைய வசவாளர்களுக்கு நாம் பதில் அளிப்பதற்கு முன்பாகவே நேற்றைய தினம் (15௯௨010) வெளி வந்த “இந்து” பத்திரிகையில்; தமிழ்நாட்டில் குறைந்து வரும் மகப்பேறு இறப்பு விகிதம், சிசு மரண விகிதம், மொத்த கருவள விகிதம் மற்றும் இந்த அரசு செயல்படுத்தி வரும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், இலவச அவசர ஆம்புலன்ஸ் திட்டம் போன்ற தி.மு.க. அரசின் திட்டங்களை பாராட்டி திவ்யா குப்தா என்பவர் ஒரு நீண்ட கட்டுரை எழுதியுள்ளார். அந்தக் கட்டுரை, குழந்தைகள் இறப்பு விகிதம் தொடர்பான பிரச்சினைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் “குழந்தைகளை காப்போம்” என்னும் இயக்கத் தின் சார்பில் நியூயார்க் நகரில் நடைபெறவிருக் கும் ஐ.நா. சபை அபிவிருத்தி இலக்குகள் குறித்த மாநாட்டுக்காக எழுதப்பட்ட ஒரு ஆய்வு அறிக்கையின் சுருக்கமாகும்.

அந்தக் கட்டுரையில், “இந்தியாவிலேயே கர்ப்பிணி இறப்பு விகிதம் மிகக் குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடாகும். 1993இல் (அ.தி.மு.க. ஆட்சியில்) ஒரு இலட்சம் பேர்களுக்கு 380 ஆக இருந்த இறப்பு விகிதம், 2008இல் (தி.மு.க. ஆட்சியில்) 111 ஆக குறைந்துள்ளது. பிரசவ நேரத்தில் சரியான மருத்துவ உதவிகள் கிடைக்காத தால் பல கர்ப்பிணி பெண்கள் மரணத்தைத் தழுவ நேரிடுவதாகக் கண்டறிந்த தமிழக அரசு மகப்பேறு அவசர உதவி மற்றும் பிறந்த குழந்தைகள் பராமரிப்புக்கான நிலை யங்களை தமிழ்நாடு முழுவதும் தகுந்த பயிற்சி பெற்ற மருத்துவர்கள் சிகிச்சை வசதிகள் ரத்த சேமிப்பு வங்கிகள் போன்ற வற்றுடன் 24 மணி நேர சேவையையும் அறிமுகப்படுத்தியது. தமிழக அரசு அறிமுகப்படுத்திய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம் கர்ப்பிணி பெண்கள் இறப்பு விகிதத்தைத் தடுக்க பெரிதும் உதவியது. இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட அரசு திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு மிகச் சிறப்பான நடைமுறைகளை கையாளு கிறது. திட்டங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதைக் கண்காணிக்க உறுதியான நடவடிக்கைகள் இங்கு மேற்கொள்ளப்படு கின்றன. அரசு விடுமுறை நாட்களிலும்கூட பொது சுகாதார நிலையங்கள் மருத்துவ சேவை அளிக்க பணியாளர்களுடன் தயாராக உள்ளன. ஞாயிற்றுக்கிழமை களிலும் செவிலியர்கள் 24 மணி நேரமும் சேவை அளிக்க தயார் நிலையில் இருக் கிறார்கள்.

தமிழக அரசு நடைமுறைப் படுத்தும் 108 ஆம்புலன்ஸ் வசதி 385 சமுதாய அபிவிருத்தி வட்டங்களுக்கு ஒன்று வீதம் குறைந்தபட்சம் 385 ஆம்புலன்ஸ் இயங்கு கின்றன. கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட ஆபத்தான மருத்துவ உதவிக்கு இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் இலவசமாக இயக்கப்படுகின்றன. ஆம்புலன்ஸ் உதவி கேட்டு யாரும் 20 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கத் தேவையில்லை. அந்த அளவில் மக்களுக்கு 108 ஆம்புலன்ஸ் பெரும் பணி புரிந்து வருகிறது. மத்திய அரசு செயல்படுத்தும் ஒருங்கி ணைந்த குழந்தைகள் அபிவிருத்தி திட்டம் போன்ற திட்டங்கள் இருந்தாலும், தமிழக அரசின் நலத் திட்டங்கள் சாதாரணமாக எங்கு சென் றாலும் யாரும் கண்கூடாக காணும் வகை யில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன” என்றெல்லாம் `இந்து’க் கட்டுரையில் எழுதப் பட்டுள்ளது.

அந்தக் கட்டுரையாளருக்குப் பேட்டியளித்த மருத்துவ நிபுணர் சாரதா சுரேஷ் என்பவர், “நான் நேரில் கண்ட ஒரு முக்கிய வேறுபாடு என்ன வென்றால் இந்தச் சுகாதார நிலையங்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக இயங்குகின்றன. மற்ற மாநிலங்களில் அவை இயங்குவதே இல்லை” என்று சொல்லியிருக்கிறார். இவ்வாறு பத்திரி கையாளர்களும், மருத்துவர்களும் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை குறித்து உயர்வாகப் பாராட்டிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், பாரதத்தில் வரும் காந்தாரி குழவிக் கல்லை எடுத்து வயிற்றிலே குத்திக் கொண்டதைப்போல, சிலர் தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறையே சரியில்லை என்று அறிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ.1,100 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் மருத்துவ மனை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ரூ.600 கோடிக்கு மேலாக நவீன மருத்துவக் கருவிகள் வாங்கி மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தனியார் மருத்து வமனைகளை தவிர்த்துவிட்டு அரசு மருத்துவ மனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண் ணிக்கை அதிகரித்து வருவதை பொதுமக்கள் அறிவர்.
ஆண்டொன்றிற்கு ரூ.236 கோடி நிதியை மருந்துக்காக கழக அரசு ஒதுக்கியுள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகளில் மருந்துக்கு தட்டுப்பாடு என்பதே இல்லை. அரசு மருத்துவமனைகளில் இதுவரை 6,772 மருத்துவர்கள், 7,242 செவிலியர்கள், 1,767 கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் 10,000-க்கும் அதிகமான மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க. ஆட்சியில் 2005௨006-ல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிகழ்ந்த மகப்பேறுகளின் எண்ணிக்கை 81,190 மட்டும்தான். கழக ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரம் உயர்த்தப்பட்டதால் அங்கு நிகழும் பிரசவங்கள் மூன்று மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளன. 2009௨010-ம் ஆண்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிகழ்ந்த பிரசவங்களின் எண்ணிக்கை 2,98,253 ஆகும்.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கடந்த ஆண்டு மட்டும் 5,57,294 சிறிய மற்றும் பெரிய அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. 79,13,344 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஜூன் 2010 வரை 2,80,016 சிறிய மற்றும் பெரிய அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. எனவே, “கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில்” தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் அறுவை சிகிச்சை மட்டுமல்லாது பல்வேறு நோய்களுக்கு அரசு மருத்துவமனைகளிலும் அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து செய்யப் பட்டு வருகின்றன.

இருப்பினும் நோயின் தீவிரம், நோயாளியின் உடனடித் தேவை மற்றும் சிறப்பு அறுவை சிகிச்சைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் இருக்கும் காத்திருப்போர் பட்டியல் போன்ற வற்றை கருத்தில் கொண்டு ஒரு கூடுதல் சேவையாக (ளுரயீயீடநஅநவேயசல குயஉடைவைல) தான் தனியார் மருத்துவமனைகளை இத்திட்டத்தின் மூலமாக ஒருங்கிணைத்து பொதுமக்கள் பயனடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலமாக சுமார் 650 தனியார் மருத்துவமனைகளின் சேவை பொதுமக் களுக்கு இலவசமாக கிடைத்துள்ளது. அதற்கு சான்று; கடந்த 14 மாதங்களில் நிகழ்ந்துள்ள சுமார் 1,93,000 அறுவை சிகிச்சைகள் மூலம் பிணி நீங்கிய பயனாளிகள்தான்.

அறுவை சிகிச்சைக்காக பதிவு செய்து காத்திருப்போர் அதிகமாக இருக்கின்றனர் என்பதை உணர்ந்து, உடனடியாக அறுவை சிகிச்சை செய்து ஏழை நோயாளிகளின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக இந்த அரசினால் கொண்டு வரப்பட்டதுதான் கலைஞர் காப்பீட்டுத் திட்டம். அரசு மருத்துவ மனைகளில் எல்லா நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதால் தான் அறுவை சிகிச்சைக்கு காத்திருப்போர் அதிகமாக உள்ள இருதய அறுவை சிகிச்சை, புற்று நோய், மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை போன்ற உயிர் காக்கும் 51 நோய்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த 51 வகையான நோய்களில் உட்பிரிவாக சுமார் 630 வகையான நோய்களுக்கு இத்திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அறிவிப்பில் கண்டுள்ளபடி இருதயம், புற்றுநோய் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை மட்டும் அல்லாது எலும்பு முறிவு, விபத்து, நரம்பியல், பிறப்பில் குறைபாடு, இன சேர்க்கை சார்ந்த நோய்கள், காது, மூக்கு, தொண்டை நோய்கள் போன்ற அனைத்து பிரிவுகளுக்கும் இத்திட்டத்தில் சிகிச்சை பெறமுடியும்.

இத்திட்டத்தில் ஒரு இலட்சம் ரூபாய் மட்டுமே அளவீடாக வைத்திருப்பினும், அனைத்து சிகிச்சைகளுமே அதற்குள் செய்துகொள்ள காப்பீட்டு நிறுவனம் மருத்துவ மனைகளுடன் ஒரு புரிந்துணர்ந்து ஒப்பந்தம் அரசு ஒப்புதலுடன் செய்துகொண்டு அதன்படி ஒவ்வொரு சிகிச்சைக்கும் கட்டணம் நிர்ணயம் செய்து அதை வலைதளத்தில் அனைவரும் அறிய வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தில் 1.33 கோடி குடும்பங்களுக்கு அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த குடும்ப அடையாள அட்டைகளினால் சுமார் 4.50 கோடி பொதுமக்கள் இந்த திட்டத்தில் பயனடைவர்.

ஒருசில “அறிக்கை ஜீவிகள்” ரூ.3,000 கோடி தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கப் பட்டதாக கூறியிருப்பதில் துளியும் உண்மை யில்லை. இதுவரை இத்திட்டத்தில் சேர்க்கப் பட்ட உறுப்பினர்களின் விகிதாச்சார அடிப்படை யில் ஆண்டு பிரிமீயத் தொகை ஒரு குடும்பத் திற்கு ரூ.469 என்று கணக்கிடப்பட்டு இதுவரை 5 காலாண்டிற்கு பிரிமீயத் தொகை ரூ.722 கோடியும், சேவை வரி ரூ.74 கோடியும் ஆக மொத்தம் ரூ.796 கோடி மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளது. காப்பீட்டு நிறுவனம் இதுவரை ரூ.515 கோடியை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்காக மருத்துவ மனைகளுக்கு வழங்கியுள்ளது. இதில் கமிஷன் என்பதற்கே இடமில்லை. ஏனெனில் திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனம் திறந்த ஒப்பந்தப்புள்ளி மூலமாகவே இறுதி செய்யப்பட்டது என்றும் அனைத்து திட்ட வடிவும் அனைத்து அதிகார மட்டங்களிலும் விவாதித்து முடிவு செய்ததும் ஆகும்.

சிக்கன்குனியா, காலரா, டைபாய்டு, அம்மை, மஞ்சள்காமாலை, பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு மருத்துவமனைகளிலேயே சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், இந்த நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவதில்லை. தரமான சிகிச்சை அரசு மருத்துவமனைகளிலேயே இத்தகைய நோய் களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ப தால் இந்த நோய்களை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டிய அவசியம் எழவில்லை. தொண்டை அடைப்பான், இளம்பிள்ளைவாதம், காச நோய், தட்டம்மை, மஞ்சள்காமாலை, கக்குவான், பொன்னுக்கு வீங்கி, இரண ஜென்னி போன்ற பல்வேறு நோய்களை தடுப்பதற்கு மத்திய அரசுதான் எல்லா மாநிலங் களுக்கும் தடுப்பூசி மருந்து களை அனுப்பி வைக்கிறது. மாநில அரசு இந்த மருந்துகளை கொள்முதல் செய்வதில்லை.

பன்றிக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பன்றிக்காய்ச்சல் வராமல் இருக்க மத்திய அரசு தடுப்பு மருந்தை தமிழகத்திற்கு அனுப்பி உள்ளது. மருத்துவர்களுக்கும் மருத்துவமனைப் பணியாளர் களுக்கும் இந்த தடுப்பூசி மருந்து போடப்பட்டு வருகிறது. பன்றிக்காய்ச்சல் வராமல் இருக்க பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் மத்திய அரசு அனுமதி அளித்துள்ள மருந்து தயாரிக்கும் கம்பெனிகளிடம் அரசு அதிகாரிகள் பேசி பொதுமக்க ளுக்கு குறைந்த விலையில் இந்த தடுப்பூசி போடும் திட்டம் கிண்டி கிங் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் தொடங்கப்படாத நிலையில் தமிழ கத்தில் மட்டும் தான் பன்றிக்காய்ச்சலுக்கு குறைந்த விலையில் தடுப்பூசி போடும் திட்டம் தொடங் கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு குறைந்த விலையில் இந்தத் தடுப்பூசி போடப் பட்டு வரும் நிலையில், மாவட்டத் தலைநகரங் களிலே உள்ள அரசு பொது மருத்துவமனை களில் இந்தத் தடுப்பு ஊசி போடவும், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களிடம் இந்தக் குறைந்த தொகையையும் கூட இனி வசூலிக்கத் தேவையில்லை என்றும் இந்த அரசு முடிவெடுத்து, உடனடியாக நடைமுறைப் படுத்திட ஆணையிட்டுள்ளது.

தமிழகத்தில் சுகாதாரத்துறையும், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசும் மற்ற மாநிலங்களும் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் சுகாதாரத் திட்டங்களை பாராட்டி இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களில் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மக்களின் நலனில் எந்தவிதமான அக்கறையும் இல்லாதவர்கள் அரசு செயல்படுத்திவரும் மக்கள் நலத்திட்டங்களையும் குறை கூறி பீதி உருவாக்கிட முயற்சி செய்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து இவ்வாறு குறை கூறிக்கொண்டே இருப்பது; நமக்கும் மக்களுக்கு உண்மையான விளக்கங்களை அளிக்கப் பயன்படுவதால் அவர்களின் தூற்றுதல்களையும் வரவேற்போம், பதில் அளிப்போம், மக்களுக்கு தெளிவு ஏற்படுத்துவோம்! மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதை மறந்து விட்டு; மலையேறி நிற்போரல்ல நாம்! என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

No comments: